நாரெக் நகர்
புனித கிரகோரியார்
விருப்ப நினைவு
பிப்ரவரி 27
முதல் வாசகம்
உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக ஞானத்தின் மீது அன்புகொண்டேன்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-10, 15-16.
நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.
உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன் மீது அன்புகொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.
கடவுளது திருவுளத்திற்கு ஏற்பப் பேசவும், நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்கு ஏற்பச் சிந்திக்கவும், கடவுள் எனக்கு அருள்புரிவாராக! ஏனெனில் ஞானத்துக்கு அவரே வழிகாட்டி, ஞானிகளைத் திருத்துகிறவரும் அவரே. நாமும் நம் சொற்களும் அவருடைய கைகளில் இருக்கின்றோம். அதுபோல் எல்லா அறிவுத்திறனும் கைத்திறனும் அவருடைய கைகளில் உள்ளன.
பதிலுரைப் பாடல்
திருப்பாடல்கள் 37: 3,4. 5,6. 30,31.
பல்லவி: (30a) நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.
பல்லவி: நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவான் 6: 63b,68b.
அல்லேலூயா, அல்லேலூயா!
உமது வார்த்தைகள்
வாழ்வு தரும் ஆவியைக்
கொடுக்கின்றன.
நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள்
உம்மிடம்தானே உள்ளன.
அல்லேலூயா, அல்லேலூயா!
நற்செய்தி வாசகம்
அதிகாரத்தோடு அவர்களுக்கு இயேசு கற்பித்தார்.
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29.
அக்காலத்தில்,
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?’ என்பர். அதற்கு நான் அவர்களிடம், ‘உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்’ என வெளிப்படையாக அறிவிப்பேன்.
ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின் மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”
இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.